ஜமாத்துல் உலமா சபையின் வேண்டுகோளை ஏற்று தொழுகைகளை வீடுகளிலேயே நிறைவேற்றுவீர்!*
*தொழிலை இழந்து வாடும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு அரசு வரம்புக்குள் நின்று ஆதரவுக் கரம் நீட்டுவீர்!*
*மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!*
*முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
*சென்னை - மார்ச் 28.*
தொழிலை இழந்து வாடும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு அரசு வரம்புக்குள் நின்று உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சமூக ஊடகங்கள் வழியே சமுதாய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் பேசியவை வருமாறு:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல இறைவனின் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்.
பேரன்பிற்கும், பெருமரியாதைக்குமுரிய பெரியோர்களே, சகோதர – சகோதரியரே! உங்கள் அனைவர் மீதும் எல்லாம்வல்ல இறைவனின் பேரருள் என்றென்றும் நின்று நிலவட்டுமாக என நான் பிரார்த்தித்தவனாக, ஒரு சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாதிருப்பதற்காக, தமிழக அரசு, நிகழும் 2020ஆம் ஆண்டு மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்த நிலையில், நமது இந்தியப் பிரதமர் அதை ஏப்ரல் 14ஆம் நாள் வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, மாநிலத்திலுள்ள எல்லாக் கடைகள், அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்கள் என எந்தவொன்றும் செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவிற்கு மட்டும் உள்ள சூழல் அல்ல. மாறாக, இந்தக் கொரோனா தொற்று இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற நிலையில், உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்தான் நமது இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் உயிர், உடல் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடு மத்திய – மாநில அரசுகள் இந்த ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.
தமிழக முதலமைச்சர் அவர்கள், மாநில மக்களுக்கு “விழித்திரு! விலகியிரு!! வீட்டிலே இரு!!!” எனத் தலைப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி, இந்த ஊரடங்கு காரணமாக தமது வணிகத்தை இழந்து, வீட்டில் முடங்கியிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பணமும், ரேஷன் பொருட்களும் கட்டணமின்றி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நமது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் அதிரடியான பல அறிவிப்புகளைச் செய்து, மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியரது சேவைகளை முடுக்கி விட்டிருக்கிறார். மட்டுமின்றி, இந்தக் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் மருத்துவத்துறை நிபுணர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பிடும்படி இல்லை என்றாலும், ஒருவேளை பாதிக்கப்பட்டுவிட்டால் அடுத்த என்ன செய்வது என்பது குறித்து முன்னெச்சரிக்கையாகப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் கூடுதலாகப் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசும் பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வரை இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் நாட்டு மக்களாகிய நமது நன்மைக்கே என்பதையும், நம்மை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது என்றும் கருதி, நாம் அனைவரும் மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு, காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு, அரசு அதிகாரிகள் - மருத்துவர்களின் வேண்டுகோள்களுக்கு மன ஓர்மையுடன் ஒத்துழைப்பளிக்க வேண்டியது இன்றைய நமது கட்டாயக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நாம் ஒருபோதும் கடுகளவும் மாறியோ, எல்லையைத் தாண்டியோ செல்லக் கூடாது என உங்கள் அனைவரையும் நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம் சமுதாயத்தினருககு கை – கால்களைக் கழுவுவது, உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்து கொள்வது என்பனவெல்லாம் அன்றாடம் ஐவேளைத் தொழுகைக்காக நாம் செய்து வரும் பழக்கவழக்கம்தான் என்றாலும், அரசாங்கம் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் வழங்கும் இதுபோன்ற ஆலோசனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, எந்தச் சூழலிலும் நாம் விட்டிராத வாராந்திர ஜும்ஆ தொழுகையைத் தவிர்க்கவும், அன்றாடம் பள்ளிவாசல்களில் நாம் தொழும் ஐவேளைத் தொழுகைகளையும் அரசு ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெறும் வரை வீட்டிலேயே தொழுமாறும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நமக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது. அதற்கும் முழுமையாகக் கட்டுப்பட வேண்டியது நமது கடமையாகும்.
“அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க, தான் மட்டும் புசிப்பவன் என்னைச் சேர்ந்தவனல்ல!” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பொன்மொழி இந்தக் காலச் சூழலில் நம் அனைவருக்கும் நினைவுக்கு வந்திருக்கிறது. அதன்படி, தற்போதைய ஊரடங்கு உத்தரவால் வீடடங்கி இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான நமது அண்டை வீட்டார், அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பனவற்றை ஆய்ந்தறிந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. அதை உணர்ந்தவர்களாக நம் சமுதாயம் அந்த அறப்பணிகளைத் தொடர்ந்து பரவலாகச் செய்து கொண்டிருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் – முன்னாள் அமைச்சர், நிகழ் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.கே.குஞ்ஞாலிக்குட்டி ஸாஹிப் அவர்கள், கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளுக்காக தமது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து துவக்கமாக ஒரு கோடி ரூபாய் தொகையை உதவியாக ஒதுக்கியளித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கட்சிக் கொறடா அன்பர் நவாஸ் கனீ அவர்கள் தமது சார்பாக ஐம்பது லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறார். அதுபோல, நமது கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் 25 லட்சம் ரூபாய் தொகையை தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இவர்களின் வரிசையில் – தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், அதன் சார்பு அணிகளான இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன், கே.எம்.சி.சி. நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் மாநிலம் முழுக்கவும் பரவலாக இந்த அறப்பணிகளைச் செய்வதற்காக ஆங்காங்கே குழுக்களை அமைத்துக் களப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர். நம்மால் இயன்ற வகைகளில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்கள், வணிகத்தை இழந்து – தொழிலை இழந்துள்ள அன்றாடங்காய்ச்சிகள், கூலித் தொழிலாளிகள், ஆட்டோ - ரிக்ஷா ஓட்டுநர்கள், ஏழை – எளியோருக்கு உதவிகளைச் செய்திட வேண்டியது இத்தருணத்தில் மிகவும் முக்கியமானது. அதை அறிந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறாகச் செய்யும் உதவிகளை நாமாகவே சுயமாகத் திட்டமிட்டுச் செய்யாமல், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விபரங்களைக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், அந்தந்தப் பகுதிகளின் காவல்துறை உயரதிகாரிகள், அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, அந்த வழிகாட்டலின் படி செய்துகொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் நாமே இந்த உதவிகளைச் செய்து என்பதுவும் இயலாத ஒன்று. வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதும், தீ விபத்துகள் போன்ற விபத்துகளின்போதும் – அதில் பாதிக்கப்பட்டவர்கள் யார், எவர் என்று பாராமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உதவிகளை வழங்கும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் நாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. இனியும் மங்காமல் இருக்கும். அந்த அடிப்படையில் உதவி செய்ய நாம் என்றுமே ஆயத்தமாக இருந்தாலும், இப்போதைக்கு இந்த முறைப்படி செய்துகொள்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31ஆம் நாள் வரை என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல் 14 வரை என்று நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு நின்றுவிடுமா அல்லது இன்னும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் நாட்டில் நிலவுகிறது. இதனால் வேலையில்லாதோர், கூலித்தொழிலாளிகள் என வருமானம் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் அரசு அறிவித்துள்ள உதவித்தொகை என்பது போதுமானதாக இல்லை. எனவே, குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாயாவது உதவித்தொகையாக ஒதுக்கியளிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். இதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு, ஆவன செய்திட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாய மக்களான நாம் இந்த நாட்டில் எல்லா வகையான சோதனைக் காலகட்டங்களிலும் முன்மாதிரி சமுதாயமாக இருந்து வந்திருக்கிறோம். அதே முன்மாதிரியைப் பின்பற்றி - அமைதி காத்தல், அரசு வரம்புகளுக்குள் நின்று அனைவருக்கும் உதவி செய்தல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடாமல் கண்காணிப்போடு இருத்தல் என நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒற்றுமை உணர்வோடு ஆதரவுக் கரத்தைத் தொடர்ந்து நீட்டியுதவ வேண்டும் என உங்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாம்வல்ல இறைவன் இப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்திலிருந்து நம்மையும், இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும், உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களையும் விடுவித்து, அனைவருக்கும் நல்ல வாழ்க்கைச் சூழலை விரைந்து தர வேண்டும் என அவனித்தில் நான் உளமாரப் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அதுபோலப் பிரார்த்திக்குமாறு உங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எல்லாம்வல் இறைவன் எல்லா நல – வளங்களையும் நிறைவாக வழங்கி, அவன் மீதுள்ள நம்பிக்கையை அனைவருக்கும் அதிகரித்து, அவனன்றி அணுவும் அசையாது என்ற உறுதியான நம்பிக்கையை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக.
முஸ்லிம் சமுதாய மக்கள் – இக்காலச் சூழலில் உங்களது தேவைகளுக்கும், விபரங்களைப் பெறவும் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீ, சட்டமன்ற உறுப்பினரும் – நம் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து அறப்பணிகளுக்கும் அவர்கள் மூலமாக நீங்கள் ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்து, எனது இந்தக் கருத்துப் பரிமாற்றத்தை முடிக்கிறேன், நன்றி.